நிவர் புயல்: புதுக்கோட்டையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

நிவர் புயல்: புதுக்கோட்டையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
நிவர் புயல்: புதுக்கோட்டையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

நிவர் புயல் அச்சுறுத்தலை தொடர்ந்து புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்குகள் அனைத்தும் நகராட்சியின் மூலம் கீழே இறக்கபட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் அதன் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை அதிகளவில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த கஜா புயலின் போது புதுக்கோட்டையில் மரங்களும் உயர்மின் கோபுர விளக்குகளும் சாய்ந்து பெரும் சேதம் அடைந்தன. அதனை கருத்தில் கொண்டு தற்போது அதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கம்பங்களில் இருக்கும் விளக்குகளை கீழே இறக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிக்குச் செல்ல தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே போல் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் மேலும் நீர் நிரம்பினால் தண்ணீர் வெளியேற வடிகால் பகுதிகளை ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு சீரமைக்கும் பணிகளிலும் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் மின் வயர்கள் அருந்திந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை கண்டு பொதுமக்கள் மேலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் பால தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரி கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைப்பதற்கான பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com