துறைமுகம் -மதுரவாயல் இடையே ரூ.5000 கோடியில் 2 அடுக்கு பறக்கும் சாலை: நிதின் கட்காரி

துறைமுகம் -மதுரவாயல் இடையே ரூ.5000 கோடியில் 2 அடுக்கு பறக்கும் சாலை: நிதின் கட்காரி
துறைமுகம் -மதுரவாயல் இடையே ரூ.5000 கோடியில் 2 அடுக்கு பறக்கும் சாலை: நிதின் கட்காரி

சென்னை துறைமுகம் - மதுரவாயில் இடையே ரூ.5000 கோடி செலவில் 6 வழிசாலையுடன் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த 2010ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை துறைமுகத்தின் 10-ம் எண் நுழைவு வாயிலில் துவங்கி, கோயம்பேடு வரை கூவத்தின் கரையோரமும், தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் மதுரவாயல் வரை உயர்த்தப்பட்ட தூண்களின் மேல் சுமார் 20 கிமீ தொலைவிற்கு உயர்த்தப்பட்ட பறக்கும் விரைவு சாலையாக கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பதே இதன் திட்டம். 2010ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், சுற்றுச்சூழல் விதிமீறல்களை காரணம் காட்டி, தமிழக அரசால் 2012ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த பறக்கும் சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என 2018ம் ஆண்டு சொல்லப்பட்டு அதற்காக மத்திய - மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய போது அன்றைய மதிப்பீடு ரூ.1,815 கோடி ஆகும். நான்கு வழியாக அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர், 4 வழிக்கு பதிலாக 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடும் ரூ.3,100 கோடியாக அதிகரித்தது.

இந்நிலையில், சென்னை துறைமுகம் - மதுரவாயில் இடையே ரூ.5000 கோடி செலவில் 6 வழிசாலையுடன் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அதாவது, ரூ3100 கோடியில் இருந்து தற்போது இந்த திட்டம் 5000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் தொகைக்காக மாநில அரசின் சார்பில் ரூ.400 முதல் ரூ.500 கோடியும், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மீதித்தொகையான ரூ.1000 கோடி கொடுக்கப்படும் என நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, மேம்பால கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட், இரும்புக்கான ஜிஎஸ்டி வரி மற்றும் மொத்த மதிப்பீட்டுக்கான ராயல்டி ஆகியவற்றிற்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னையில் போக்குவரத்து சிக்கலைத் தவிர்க்கும் இந்த ஃப்ளை ஓவரை வடிவமைக்க சர்வதேச ஆலோசகரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கான தமிழக அதிகாரிகள் ஆகியோர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் நிதின் கட்காரி இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் மல்டி- மாடல் பூங்கா ஒன்றை மேம்படுத்தவும், மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 2021இல் முடிக்கவுள்ள இந்தத் திட்டத்திற்கு சென்னை துறைமுகத்திற்கு அருகில் ஒரு இடத்தை ஒதுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது எனவும் கட்கரி தெரிவித்துள்ளார்.

என்.எச் 45 மற்றும் என்.எச் 4 சாலைகளை விரிவாக்க முதல்வர் பழனிச்சாமி வைத்த கோரிக்கையையும் கட்காரி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த சாலைகளை விரிவாக்க ரூ.700 கோடி செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் மாநில அரசு அதற்கு தடையற்ற நிலத்தை வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், என்.எச் 136 மற்றும் என்.எச் 54 சாலைகளையும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் சாலை திட்டங்களை விரிவுபடுத்துவதில் இருக்கும் சிக்கல்களை தீர்த்துவைக்குமாறு மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு முதலமைச்சர் சாதகமான பதிலை அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com