நிர்மலாதேவி மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி மற்றும் முருகன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி மாணவி ஒருவரிடம் பேசிய ஆடியோ வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை அடுத்து பாலியல் குற்றத்திற்கு தூண்டுதல், குற்றச் செயலுக்கு முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நிர்மலாதேவியும் முருகனும் ஜாமீன்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் புகாரளித்த மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் என்று சிபிசிஐடி காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து நிர்மலாதேவி மற்றும் முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வழக்கை நாள்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.