"ஒரு மனிதநேயமிக்க தலைவர் இருந்தார் என நினைவில் கொள்ளவேண்டும்"! - நிர்மலா சீதாராமன் புகழாரம்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் முதலில் சாலிகிராமத்தில் இருந்த அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.
பின்னர் இட நெருக்கடி காரணமாக சென்னை ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக தொண்டர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவருடைய உடலை அரச மரியாதையுடன் அடக்கம்செய்ய எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜயகாந்தை மனிதநேயமிக்க மக்கள் தலைவர் என்று புகழ்ந்தார்.
இன்றைய தேதியில் இப்படி ஒரு மனிதநேயமிக்க தலைவர் இருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!
நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய நிர்மலா சீதாராமன், “துக்கமான இந்த தருணத்தில் பணிவன்புடன் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் மோடி அவர்கள் டிவிட்டரில் இரங்கல் பதிவுசெய்ததுமட்டுமில்லாமல், மத்திய அரசின் சார்பாக உடனடியாக நீங்கள் அங்கு சென்று, கேப்டனின் குடும்பத்தாரையும், தொண்டர்களையும் சந்தித்து துக்கத்தில் பங்கேற்க வேண்டுமென்று கூறினார். கேப்டன் அவர்கள் மக்களுக்காக பாடுபட்டது மற்றும் வீட்டிற்கு வரும் ஒருவருக்கு கூட சாப்பாடு போடாமல் அனுப்பியதில்லை என்பதை நாம் தனியாக பிரித்து சொல்லவேண்டியதில்லை. ஏனேன்றால் அவர் இயல்பிலேயே இளகிய மனம் கொண்டவர். அதனால் அவர் தனக்கு கிடைத்த அதே உணவும், அதே வசதிகளும் கூட மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்.
இதுகுறித்து விஜயகாந்த் பேசிய ஒரு வீடியோவை நான் பார்த்திருக்கிறேன், அதில் “ நான் சாப்பிடும் அதே உணவை தான் மற்றவர்களும் சாப்பிடவேண்டும், இதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது” என்று கூறியவர் விஜயகாந்த அவர்கள். அவரின் இத்தகைய மனப்பான்மையால் பாகுபாடற்ற சூழல் உருவாகியுள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது. அப்படிப்பட்ட விஜயகாந்த் தற்போது நம்மிடம் இல்லை என்பதை வார்த்தையால் விவரிக்கவே முடியவில்லை. பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டொமா என காத்திருக்கும் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
மேலும் ”மனித நேயத்தோடும், தன் பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய ஒரு நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம்” என்றும், “இன்றைய தேதியில் மனிதநேயத்தோடு இப்படி ஒரு அரசியல் தலைவர் இருந்தாரா என்பது நம் எல்லோர் மனதிலும் எப்போதும் இருக்க வேண்டும்” என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.