கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சர்ச்சையில் சிக்கியிருக்கும் அவரை சிபிசிஐடி காவல்துறையினர் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அந்தப்பிரிவின் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, நிர்மலா தேவியிடம் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார். நிர்மலா தேவிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார், யாருடன் தொடர்பு உள்ளது எனக் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவர் சரியான பதில்களை அளித்தாரா என்பது தெரியவில்லை.
பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவியின் இல்லத்திற்கு அவரது சகோதரர் ரவியை அழைத்துச் சென்று அங்கு சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த கணினி மற்றும் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். இரவு சுமார் 10 மணி அளவில் நிர்மலா தேவியின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. தேவாங்கர் கல்லூரியிலும் சிபிசிஐடி அதிகாரிகளின் ஒரு குழு விசாரணை நடத்தியது.