நீலகிரி: இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வருமாறு நேரில் சென்று அழைத்த ஆட்சியர்
செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மசினகுடி பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பழங்குடியின மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் இடைநின்றது அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மசினகுடி பகுதியில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கு அவர் நேரடியாக சென்றார்.
இந்நிலையில், மாணவர்களின் பெற்றோரை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாணவர்களின் நலன் காக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்த அவர், குழந்தைகளை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பழங்குடியின மாணவர்களின் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்றது.