நீலகிரி: சாலை வசதி கேட்டு 80 ஆண்டுகால போராட்டம் - வனத்துறை அனுமதி கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி
செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி செம்பக்கொல்லி பழங்குடியின கிராமம்.
இந்த கிராமத்தில் குரும்பர், இருளர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். பல தலைமுறைகளாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி எல்லையில் வசித்து வரும் இந்த கிராம மக்களுக்கு சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தது.
இதையடுத்து சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென பழங்குடியின மக்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டார்கள். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி மற்றும் கூடலூர் வனப்பகுதி வழியாக இந்த கிராமத்திற்கான சாலை செல்வதால் வனத்துறை மூலம் தடையில்லா சான்று கிடைக்காமல் இருந்ததே சாலை அமைப்பதற்கு தடையாக இருந்தது.
பல தலைமுறைகளாக வனப்பகுதியை ஒட்டி வசித்து வரும் தங்களுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார்கள். இந்நிலையில், புதிதாக நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்ற லட்சுமி பல்யா தண்ணீரு மற்றும் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோரிடம் தங்களது கோரிக்கையை இவர்கள் முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகளும் நேரடியாக கிராமத்தில் ஆய்வு செய்து அரசுக்கு கிராம மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை குறித்து தெரிவித்திருக்கிறார்கள். அதிகாரிகளின் சீரிய முயற்சி காரணமாக வன உரிமை சட்டத்தின் கீழ் செம்பக்கொல்லி பழங்குடியின கிராமத்திற்கு சுமார் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மூன்று கிலோமீட்டர் தூரம் வரையிலான சாலையை அமைப்பதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது.
வனத்துறையினரும் சாலை அமைப்பதற்கான தடையில்லா சான்றை வழங்கி இருக்கிறார்கள். அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி காரணமாக 80 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இன்றி சிரமப்பட்டு வந்த பழங்குடியின மக்களுக்கு தற்பொழுது சாலை வசதி கிடைக்கப்பெற்றுள்ளது. சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள், பேரூராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள், பழங்குடியின மக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.