நீலகிரி | நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய இ-பாஸ் நடைமுறை
செய்தியாளர்: மகேஷ்வரன்
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வெளி மாநில மற்றும் மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இ-பாஸ் நடைமுறை தொடர்பாக மேலும் புதிய கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது. அதன்படி வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து நள்ளிரவு முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனவும் மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில் கேரளாவில் ரம்ஜான் விடுமுறை என்பதால் அதிகாலை முதல் நாடுகாணி சோதனைச் சாவடி வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் நீலகிரி மாவட்டம் நோக்கி வர துவங்கின. புதிய இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் அதற்கான சோதனைகளும் சோதனை சாவடியில் நடத்தப்பட்டு வருகிறது. இ-பாஸ் சோதனை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை, சங்க நுழைவு வரி வசூல் உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் இருந்து வரக்கூடிய பல சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுக்காமலேயே வருவதால் சோதனைச் சாவடி பணியில் உள்ள பணியாளர்கள் இ-பாஸ் எடுத்துக் கொடுத்த பிறகு அவர்களை அனுமதித்து வருகிறார்கள். ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்து அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக உள்ளுார் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.