நீலகிரி: 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக வசமான கூடலூர் தொகுதி

நீலகிரி: 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக வசமான கூடலூர் தொகுதி
நீலகிரி: 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக வசமான கூடலூர் தொகுதி

மலை மாவட்டத்தில் 2 தொகுதிகளை தக்க வைத்து கொண்டது திமுக கூட்டணி ஆனால், திமுகவின் கோட்டையாக இருந்த கூடலூர் தொகுதி 15 ஆண்டுகளுக்கு பின்னர் அதிமுக வசமானது.

மலை மாவட்டமான நீலகிரியில் உதகமண்டலம், குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்ற நிலையில் குன்னூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் முன்னாள் கதர் துறை அமைச்சருமான இளித்துரை ராமசந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத்தை விட 4105 வாக்குகளை அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

அதே போல உதகை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 2-வது முறையாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போஜராஜை விட 5623 வாக்குகளை அதிகமாக பெற்று வெற்றி வாகை சூடினார்.

ஆனால் திமுகவின் கோட்டை எனக் கூறபட்ட கூடலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காசிலிங்கம் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் காசிலிங்கத்தை விட 1945 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசன்ட் திவ்யா சான்றிதழ் வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com