தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு அமலுக்கு வந்தது. இதனால் மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தலைநகரான சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அண்ணா சாலை, காமராஜர் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்பட்டிருந்தன.

கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிலர் சாலையோரம் தங்கினர். இதே போன்று, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த பயணிகள் அங்கேயே படுத்துறங்கினர். சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக விளங்கும் பாண்டிபஜாரில் ஜவுளி கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் போன்றவை இரவு 9 மணிக்குள் அடைக்கப்பட்டன. சென்னையின் பிற இடங்களிலும் இவற்றை காண முடிந்தது.

இரவு நேர ஊரடங்கால் திருச்சியின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், எந்நேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது. திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் மதியம் 3 மணிக்கே நிறுத்தப்பட்டன. வெளியூர்களில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வந்தவர்கள் பயண சீட்டை காண்பித்து வாடகை கார் மற்றும் ஆட்டோவில் வீடுகளுக்கு திரும்பினர். மாற்றுப் பேருந்து கிடைக்காதவர்கள் பேருந்து நிலையத்திலேயே தங்கினர். இரவு நேர ஊரடங்கால் 9 மணிக்கே கடைகள் மூடப்பட்டன.சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து 250க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் பெரியார், காளவாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பேருந்துகள் இல்லாததால், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கேயே தங்கினர். பிஸ்கட், குடிநீர், உள்ளிட்டவை கூட வாங்குவதற்கு கடைகள் இல்லாமல் அவதியுற்றனர். இரவு 9 மணிக்கே மதுரையில் உள்ள முக்கிய கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மொத்த காய்கறி மார்க்கெட்டில் அதிகாலை 4 மணிக்கு பிறகே விற்பனை தொடங்கப்பட்டது.

வெளியூர்களில் இருந்து மதுரைக்கு ரயில்கள் மூலம் வந்த பயணிகள், பதிவு செய்யப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் வீடுகளுக்கு திரும்பினர். 60 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதே போன்று, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருப்பூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. வீதிகளை மீறி செல்பவர்களை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com