கோவை, நாகை உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
கோவை, நாகை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் செல்ஃபோன்கள், லேப்டாப் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இளையாங்குடி, சிவகங்கை கோவையில் ஜி.எம் நகர், லாரிப்பேட்டை ஆகிய 2 இடங்களில் அதிகாலையிலேயே என்ஐஏ அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். ஏற்கெனவே, தேசிய புலனாய்வு முகமையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் சமீர், சௌருதீன் ஆகிய இருவர் வீட்டில் சோதனை நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடத்திய சோதனையில், 2 மடிக்கணினி, 8 செல்போன்கள், 5 சிம்கார்டு, 1 மெமரி கார்டு, 14 ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
நாகை மாவட்டம் சன்னமங்கலம் சேவாபாரதி பகுதியைச் சேர்ந்த முகமது அஜ்மலிடம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். 3 என்ஐஏ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடத்திய இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் அப்துல்லா என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வீட்டில், அப்துல்லா இல்லாததால் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். முடிவில், அப்துல்லாவின் செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோன்று, திருச்சி மாவட்டம் இனாங்குளத்தூர் பகுதியில் சாகுல் ஹமீது என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இவர் மீது ஏற்கெனவே வழக்கு உள்ள நிலையில், கேரள என்ஐஏ அதிகாரிகள், டிஐஜி விஜயகுமார் தலைமையில் 3 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் முக்கிய குறிப்புகள் அடங்கிய டைரி, லேப்டாப் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே உள்ள சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த தடா அப்துல் ரஹீமின் அமைப்புடன் தொடர்புடைய முகமது சிராஜுதீன் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுவிக்குமாறு தொடர்ந்து முகநூலில் பதிவிட்டு வந்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதன் பின் சிராஜுதீனை சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்றும், தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.