நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிப்பு - சிபிஎஸ்இக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக, தமிழக அரசு தலைமைச் செயலரும், சிபிஎஸ்இ தலைவரும் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலங்களில் சென்று தேர்வெழுதியது தொடர்பாகவும் , மாணவர் உடன் சென்ற கிருஷ்ணசாமி உயிரிழந்தது தொடர்பாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.
மேலும், “கடும் மன உளைச்சலுக்கு மத்தியில், மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதும் நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. போதுமான மையங்களை ஒதுக்க மாநில அரசும், சிபிஎஸ்இயும் தவறிவிட்டன. மாணவர்கள் ஏன் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனவும் பதிலளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
“நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு தங்களது மாநிலத்தில் வசதிகள் செய்து தராதது என்பது மாநில அரசு, சிபிஎஸ்இயின் தோல்வியை காட்டுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களையும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது” என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.