செய்தி எதிரொலி: கணவரை இழந்து 4 குழந்தைகளுடன் தவித்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 9 லட்சம
தந்தையை இழந்த நான்கு குழந்தைகளுக்கு புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, ஒன்பது லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக தந்தை இறந்துவிட்டதால், மாற்றுத் திறனாளி பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் தாய் தவித்து வந்தார். அரசின் நிபந்தனை காரணமாக அக்குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இது குறித்து விரிவான செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு ஒன்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது
காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் - தனம் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதில், இரண்டு பெண் பிள்ளைகளுக்கு வாய்பேச இயலாது. கைவினை பொம்மை செய்து விற்பனை செய்து வந்த சுந்தரராஜன் குடும்பம், கொரோனா பொது முடக்கம் காரணமாக தொழிலும் முடங்கிப்போனதோடு வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நோய்த் தொற்று காரணமாக சுந்தர்ராஜன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை மற்றும் பிள்ளைகளுக்கு உண்டான கல்வி எதிர்காலம் அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, சுந்தர்ராஜன் குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் பட்டியலில் இல்லை எனக் கூறி இவர்களுக்கு அரசு நிவாரணம் எதுவும் வழங்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பொருளாதார ரீதியில் நலிவடைந்து குடும்ப பாரம் அனைத்தையும் 12-ம் வகுப்பு படித்த தனது இரண்டாம் மகனிடம் தனம் ஒப்படைத்து விட்டார். கல்லூரி செல்லும் வயதில் அச்சிறுவன் குடும்ப பாரத்தைச் சுமந்து கிடைக்கும் சிறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். சுந்தர்ராஜனின் குடும்பத்தின் நிலை குறித்து புதிய தலைமுறையில் விரிவாகச் செய்தி வெளியிடப்பட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் உதவ, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை தொகுத்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலர் மதியழகன் புதிய தலைமுறை செய்தி வாயிலாக மேற்கண்ட குடும்பத்தின் நிலைமையை அறிந்து, உடனடியாக காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உண்மை நிலையை அறிந்து அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் இணைத்து தற்போது குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி தமிழக அரசிடமிருந்து சுந்தர்ராஜனின் குடும்பத்திற்கு சுமார் 9 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இத்துடன் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நோய்தொற்று பாதிப்பால் தாய் தந்தை இறந்த 62 குழந்தைகளுக்கு சுமார் ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதில் சுந்தரராஜன் குடும்பத்திற்கும் 9 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
-பிரசன்னா