‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்

‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்
‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்

கிருஷ்ணகிரியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காணாமல்போன தம்பதி கொல்லப்பட்டது எப்படி? காவல்துறை நடத்திய‌ விசாரணை என்ன? பார்க்கலாம்.

பெலக்வாடி, கர்நாடகா எதிர்ப்புகள் பலவற்றைக் கடந்து திருமணத்தில் இணைந்த இளம் தம்பதியை, சாதி எனும் தீ பலி கொண்டுவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நந்திஷ், சுவாதி தம்பதி, மணமான மூன்றே மாதத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் கொலை நடந்தது எப்படி என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்ட இருவரும், ஓசூர் அருகே வாடகை வீடு ஒன்றில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், சுவாதி இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு அங்கு சென்ற பெண் வீட்டார், நடந்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு இருவரையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு அடையாளமாக நந்தீஷுக்கு தங்க மோதிரம் ஒன்று ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் முறைப்படி திருமணம் நடத்த விரும்புவதாக கூறி அன்பாய் பேசிய பெண்ணின் தந்தை சீனிவாசன், கடந்த10ஆம் தேதி இருவரையும் காரில் அழைத்துச் சென்றதாக கூறபப்டுகிறது. பெற்றோர் மனம் திருந்திவிட்டதாக நினைத்து மகிழ்ச்சியில் இருந்த தம்பதிக்கு, சிறிது நேரத்திலேயே அவர்களின் கொடூர முகம் தெரியவந்தது. காரிலேயே இருவர் மீதும் தாக்குதல் நடத்திய சீனிவாசன் தரப்பு கும்பல், அவர்களைக் கொன்று பெலக்வாடி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசிவிட்டு தப்பி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய இரு சடலங்கள், கடந்த 13ஆம் தேதி ஆற்றில் இருந்து கண்டெடுத்தபோது தான் இந்த கொடூரம் வெளியுலகுக்கு தெரியவந்தது. கொலை செய்தபின், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக, நந்திஷின் முகத்தைச் சிதைத்த கொலையாளிகள், சுவாதிக்கு மொட்டை அடித்ததாகத் கூறப்படுகிறது. சாதி ரீதியான பிரச்னையால் இருவரும் கொலை செய்யப்பட்டதாக கூறும் கிருஷ்ணகிரி காவல்துறையினர், பெண்ணின் தந்தை சீனிவாசன், சித்தப்பா வெங்கடேசன் உள்ளிட்ட மூவரை கைது செய்து கர்நாடக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மண்டியா மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைவரும் சமம் என்று நினைக்கும் மனப்பான்மை வந்தால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என்பதே நிதர்சனம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com