மேஜைக்கு வந்து உணவு கொடுக்கும் ரோபோ: சென்னையில் ஒரு அதிசயம்
'த வேர்ல்ட் ஈஸ் நாட் ஒன்லி ஃபார் ஹியூமன்ஸ்' என்ற வாக்கியம் நிரூபணமாகும் வகையில் அண்மையில் ரோபாக்களின் பயன்பாடும் உற்பத்தியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையிலும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரோபோ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசூர வளர்ச்சி பெற்று வருகிறது. மனிதன் தன் வேலைகளை எளிதாக்க இயந்திரத்தை கண்டுபிடித்தான். அதில் ஒருபடி உயர்வாக மனிதன் உருவத்தில் ரோபோக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது அந்த ரோபோக்களே மனிதனை போன்ற ஒரு சில விஷயங்களையும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்தளவிற்கு மனிதன் அதனை வடிவமைத்துள்ளான். அந்த வகையில் ஜப்பான், சீனா, சவுதி அரேபியாவில் இருக்கும் சோபியா ரோபோவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அதன் வருகை அதிகரித்திருக்கிறது. சென்னையிலும் ரோபோ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் கார்த்திக் மற்றும் வெங்கடேஷ் என்ற இரு நண்பர்களின் உழைப்பில் ரோபோ உணவகம் ஒன்று உருவாகியிருக்கிறது. உணவகத்திற்குள்ளே நுழைந்ததும் பார்க்கும் இடமெல்லாம் ரோபோக்களின் உருவங்களும், ஆளுயர நிற்கும் நிஜ ரோபோக்களும் தான் நம்மை வரவேற்கின்றன. நாம் அமர வேண்டிய மேஜையை தேர்வு செய்து அமர்ந்த பின்னர், உணவு ஆர்டர் கொடுக்க கையடக்க கணினி ஒன்று உள்ளது. அதில் உணவு வகையைத் தேர்வு செய்ய வேண்டும். சிறிது நேர இடைவேளையில், சர்வர்களுக்குப் பதிலாக ரோபோ ஒன்று உணவை எடுத்து வருகிறது. உணக்கொண்டு வந்ததும், 'டேக் யுவர் ஃபுட்' என்று நம்மை பணிக்கிறது. ரோபோ வரும் வழியில் குறுக்கிட்டால் 'ப்ளீஸ் லீவ் மை வே' என்று எச்சரிக்கையையும் இந்த ரோபோக்கள் கொடுக்கின்றன.
உணவை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்த 'ப்ளீஸ் டச் மை ஹேண்ட்,தென் ஐ கோ டு நெக்ஸ்ட் சர்வீஸ்' என்று சொல்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. குழந்தைகள் செல்பி எடுப்பதற்காக தனி ரோபோ ஒன்றும் உணவகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உணவு பரிமாறுவதோடு மட்டுமில்லாமல், பிறந்த நாள்வாழ்த்துப் பாடல்களைப் பாடி வந்து, கேக்கை தந்தும் இந்த ரோபோக்கள் அசத்துகின்றன. ஒராண்டு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, ரோபோ குறித்த ஆராய்ச்சிக்கு பின் இந்த ரோபோ உணவகத்தை திறந்துள்ளதாக இதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

