"புயலே வந்தாலும் சிதையாது"- புதிய பாம்பன் பாலத்தின் சிறப்புகள் !

"புயலே வந்தாலும் சிதையாது"- புதிய பாம்பன் பாலத்தின் சிறப்புகள் !
"புயலே வந்தாலும் சிதையாது"- புதிய பாம்பன் பாலத்தின் சிறப்புகள் !

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தை, ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் பாலம் 1914, பிப்ரவரி 24-ஆம் தேதி மீட்டர் கேஜ் பாதையாக கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டு சாலைப் பாலம் அமைக்கப்படும் வரை, பாம்பன் ரயில் பாலம் மட்டுமே, ராமேஸ்வரம் தீவுக்கும், பிரதான நிலப்பரப்புக்கும் உள்ள ஒரே இணைப்பாக இருந்தது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினசரி ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல இந்தப் பாலம் பயன்படுகிறது.

146 எஃகு காரிடர்கள் மூலம் 2,058 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள இப்பாலம் ஏற்கெனவே 104 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளது. இது அப்பாலத்தின் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டுக் காலத்தை விட மிகவும் அதிகமாகும். மேலும், இந்தப் பாலத்தின் உயரம், கடல் நீர் மட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரமே உள்ளதால், பாலத்தின் காரிடர்களின் அடிப்பாகம் கடல் நீரில் நனைந்து துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இதனால், இப்பாலத்துக்கு இணையாக, இரட்டை ரயில் பாதைக்கு ஏற்றவாறு, புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாலம் 18.3 மீட்டர் நீளம் உள்ள 100 ஸ்பான்களும், 63 மீட்டர் நீளம் உள்ள நேவிகேஷனல் ஸ்பானும் கொண்டதாக இருக்கும். புதிய பாலம், கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்திலும், நேவிகேஷனல் ஸ்பான், செங்குத்தாக உயர்த்தப்படும் வகையிலும் அமையும். இதனால், ஸ்பானின் நீளமான 63 மீட்டர் அகலமும், கப்பல் போக்குவரத்துக்கு முழுமையாக கிடைக்கும். 

புதிய பாலத்தின் அடிப்படை கட்டுமானமும், நேவிகேஷனல் ஸ்பானும், இரட்டை ரயில் பாதை அமைக்க ஏற்றவாறும், மின் மயமாக்கலுக்கு ஏற்றவாறும் வடிவமைக்கப்படும். தற்போதுள்ள, மனித சக்தியால் இயக்கப்பட்டு பாலம் உயர்த்தப்படும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், புதிய பாலம் மின் இயந்திர கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டிருக்கும். மேலும் இது ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைக்கப்படும்.மேலும், இந்த புதிய பாலத்தில், துருப்பிடிக்காத எஃகினால் ஆன வலுவூட்டம், கம்போஸிட் ஸ்லீப்பர்கள் மற்றும் அதிக ஆயுள் கொண்ட சாயம் போன்ற பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய பாலத்தின் திட்ட மதிப்பீடு ரூ. 250 கோடிகள் ஆகும். இப்போதுள்ள பாலப் பகுதியில் 53 கி.மீ. வேகத்துக்குமேல் காற்று வீசினாலே, ரயில் மேற்கொண்டு செல்ல சிக்னல் கிடைக்காது. இதனால் அடிக்கடி ரயில் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது. ஆனால் புதிய பாலத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட உள்ளதால், எந்தளவுக்கு மழை, காற்று என இயற்கை அச்சுறுத்தினாலும் பாதிக்காத வகையில் வகையில் அமைக்கப்பட உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com