அமலுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு!

அமலுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு!
அமலுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு!
Published on

தமிழக அரசு மெட்ரோ ரயிலுக்கான கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டதை அடுத்து குறைக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு முன்பாக 1 லட்சத்து 13 ஆயிரம் வரை அதிக பட்சமாக பயணிகள் தினசரி பயணித்து வந்தனர். நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த உடன் அரசு பிறப்பித்த தளர்வுகளின் அடிப்படையில் மெட்ரோ ரயில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பயணிகளிடம் அதிகபட்சகட்டணமாக ரூ.70 வரை வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டது. இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது. ஸ்மார்ட் கார்டு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு பத்து சதவிதமும், கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com