கணவர் வீட்டில் நகைகளை திருடிச்சென்ற புதுப்பெண்
சென்னையில் புதுமணப்பெண் ஒருவர், கணவர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகளை திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பாரிமுனையில் உள்ள கொண்டித்தோப்பைச் சேர்ந்த ஆனந்த்ஜெயின் என்பவருக்கும், புனேவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் தரகர் மூலம் கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் ஆனந்த் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பிய ஆனந்த், ஜெயஸ்ரீ இல்லாததை கண்டு அவரை பல இடங்களில் தேடியுள்ளார். தற்செயலாக பீரோவை திறந்து பார்த்தபோது, ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மாயமானது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்த் வயதானவர் என்பதை பயன்படுத்தி, திட்டமிட்டு திருமண நாடகத்தை அரங்கேற்றி நகைகளுடன் ஜெயஸ்ரீ தலைமறைவாகி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.