நீர்நிலைகளை தூர்வார நிதி வழங்கிய புதுமண தம்பதி
புதுக்கோட்டையில் புதுமண தம்பதியினர் மணமேடையில் வைத்து நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக நிதி வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா கொத்தமங்கலம் கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ‘கொத்தமங்கலம் இளைஞர்கள் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களாக தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு பலரும் நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
அரசை எதிர்பார்க்காமல் நீர்நிலைகளை பாதுகாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், கார்த்திகா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த கையோடு மணமேடையில் வைத்தே மணமக்கள் இருவரும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக தங்களது நிதி உதவியை வழங்கினர். அதன்படி, ரூ.6 ஆயிரத்தை இளைஞர் அமைப்பினரிடம் கொடுத்தனர்.
ஏற்கனவே அக்கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ராஜம்மாள் என்பவர், தான் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி சேமித்து வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை தூர்வாரும் பணிக்காக வழங்கியது குறிப்பிடத்தக்கது.