‘தமிழக பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்’ - மேலிடப் பார்வையாளர்
பாஜகவின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடந்து முடிந்து நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் சில வாரங்களில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் மேலிடப்பார்வையாளர் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின் 4 மாதங்களாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அதில் அக்கட்சியின் மேலிட பிரதிநிதிகளான சிவபிரகாஷ், தேசிய இணை அமைப்பு பொதுச் செயலாளர் நரசிம்மராவ் உள்ளிட்டோர் தமிழக பாஜக நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தனர். அதில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர் குப்புராமு உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து கேட்பு கூட்டம் நடந்துள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களில் வெளியிடப்படும் என, நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.