கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர்.. புதிய தடுப்பணை கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர்.. புதிய தடுப்பணை கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!
கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர்.. புதிய தடுப்பணை கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

வீணாக கடலில் கலக்கும் காவிரி ஆற்றின் நீரை சேமிக்க கரூர் மாவட்டம் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்டக் கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், "காவிரி ஆறு தலைக்காவேரியில் உருவாகி பூம்புகார் கடலில் கலக்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படுகிறது.

தமிழகத்தில் நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களும் காவிரிப்படுகைகள் அமைந்துள்ளது. இந்த 8 மாவட்டங்களில் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் காவிரி ஆற்றின் மூலம் 2.69 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி பெறுகிறது. மீதமுள்ள 6 மாவட்டங்களும் 2.20 என்ற அளவில் மட்டுமே பாசன வசதி பெறுகிறது. நல்ல பருவநிலை காலங்களில் காவிரி ஆற்றின் நடுவே தடுப்பணைகள் இல்லாததால் 2 லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. தற்போது காவேரி ஆற்றில் மாயனூரில் தடுப்பணை ஒன்று உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 1.04 டிஎம்சி அடியாக உள்ளது‌.

இதே போல், கூடுதல் தடுப்பணைகள் கட்டப்பட்டால் தண்ணீரை சேமித்து, புதிய நீர் வழித்தடங்கள் மூலம் விவசாயம் செய்ய முடியாத மற்ற நிலங்களுக்கும் பயன்படுத்தலாம். இதற்காக 2018 அப்போதைய தமிழக அரசு காவிரியின் குறுக்கே கரூர் மாவட்டம் புஞ்சை புகளூரில் ரூ 490 கோடி செலவில் தடுப்பணை கட்ட திட்டம் வகுத்தது. ஆனால் தற்போது வரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, கடலில் வீணாகக் கலக்கும் காவேரி ஆற்றின் நீரினை பயனுள்ள வகையில் சேமிக்கும் விதமாக கரூரில் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்ட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரர் கூறுவது குறுகிய கால பணி இல்லை. ஆனால் இது முக்கிய பிரச்சனை” என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, “அரசு தரப்பில் இதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டத்தின் முழுவிவரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இவ்வாறாக இவ்வழக்கில் காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டத்தின் முழுவிவரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com