தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கு புது ஐடியா - எம்ஐடிஎஸ் அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கு புது ஐடியா - எம்ஐடிஎஸ் அறிக்கையில் தகவல்
தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கு புது ஐடியா  -  எம்ஐடிஎஸ் அறிக்கையில் தகவல்

தேசிய அளவில் பிரபலமான முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்ஐடிஎஸ்) ஆய்வுப் பேராசிரியர்கள், கொரோனா காலத்தில் உடனடியாக கவனம்கொள்ள வேண்டிய பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர்.

இதுவரை பொருளாதார நிலை, வேளாண்மை, தொழிலாளர் பிரச்னை, தமிழ்ப் பதிப்புலக பிரச்னை, தமிழக நீர்நிலை மேம்பாடு, குறைந்த விலை வீடுகள், வீட்டுப் பணியாளர் பாதுகாப்பு, புலம்பெயர் தொழிலாளர் நிலை, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு, தமிழகத்தில் சமூகப் பாதுகாப்பு மற்றும் பஞ்சாயத்துராஜ் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கொள்கைசார் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அண்மையில், தமிழகத்தில் உதிரி எந்திரப் பாகங்களை ஒன்றுதிரட்டுதலில் உள்ள வேலைவாய்ப்பை கவனப்படுத்தி பேராசிரியர்கள் சி. வீரமணி, ப.கு.பாபு ஆகியோர் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில், “தமிழக மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பள்ளிக்கல்வியை முடித்தவர்களாகவும், சிறந்த ஊதியத்துடன் கூடிய மதிப்புள்ள வேலைகளைத் தேடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை உதிரிப்பாகங்கள் மற்றும் அசெம்பிளிங் செய்யும் தொழில்துறைகளில் ஈடுபடுத்தினால் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்” என்ற ஆலோசனையை கூறியுள்ளார்கள்.    

மேலும், இன்றைய நிலையில் அனைவரின் கவனமும் உள்நாட்டை நோக்கி இருப்பதால், உலகத்திற்காக தமிழகத்தில் ஒன்றுகூடுவதற்கான  சரியான நேரம் இதுதான். நெட்வொர்க் பொருட்கள் என அழைக்கப்படும் உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துவதன் மூலம், ஏற்றுமதியை அதிகரிக்கலாம். அதேநேரத்தில் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தத் தொழில்களில் அகிகம்  கவனம் செலுத்தவேண்டும்?   என்ற கேள்விக்கும் பேராசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகம் உள்ள  தொழில்களி்ல் நல்ல வளர்ச்சியைப் பார்க்கமுடியும். மேலும், வளர்ந்துவரும் தொழிலாளர்கள் பெருக்கத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்பையும் உருவாக்கவேண்டும். தொழில்துறையில் இரண்டு வகையான தொழில்கள் ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான வலிமையை வைத்திருக்கின்றன. முதலாவதாக, தமிழ்நாட்டில் பாரம்பரியமான  திறனற்ற தொழிலாளர்கள் நிறைந்த ஜவுளித்துறை, ஆடை ஆயத்தப் பணிகள்,  காலணி மற்றும் பொம்மைகள் தயாரிப்பு ஆகிய துறைகளில் இன்னும் பயன்படுத்தப்படாத ஏற்றுமதித் திறன் உள்ளது. அதில் பட்டாசுத் தயாரிப்பு மற்றும் தோல் தயாரிப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தத் தொழில்களில் த குளோபல் வேல்யூ செயின் எனப்படும் உலகளாவிய  மதிப்புச் சங்கிலிகளை, வாங்குபவர்களால் இயக்கப்படும் நெட்வொர்க்குகள் கட்டுப்படுத்துகின்றன. அதில் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் வடிவமைப்பு, பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற அதிக மதிப்பு கூட்டப்படும் செயல்களில் கவனம் செலுத்துகின்றன.  எடுத்துக்காட்டாக, வால்மார்ட், நைக் மற்றும் கர்ஸ்டாட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களைச் சொல்லலாம்.

இரண்டாவதாக, இறுதியாக அசெம்பிளிங் செய்யப் பயன்படும் உதிரிப் பாகங்கள் தயாரிப்பின் தலைமையகமாக தமிழகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தத் தொழில்களின் குளோபல் வேல்யூ செயினை ஆப்பிள், சாம்சங், சோனி போன்ற நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. பொதுவாக இந்தத் தயாரிப்புகள், ஆரம்பம் முதல் கடைசி வரையில் ஒரே நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக சில நாடுகள், உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட பணிகள் அல்லது நிலைகளில் நிபுணத்துவம் பெற்றதாக உள்ளன.

உற்பத்தி வலைப்பின்னலில், ஒவ்வொரு நாடும் உற்பத்திச் செயல்முறையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தகுதி பெற்றுள்ளன. அதிக தொழிலாளர்களைக் கொண்ட சீனா போன்ற நாடுகளில் குறைந்த ஊதியத்தில் தயாரிப்புப் பணிகளைச் செய்யமுடியும். பணக்கார நாடுகள் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் நிபுணத்துவம் பெற்றவையாக உள்ளன.

உலக தயாரிப்பு ஏற்றுமதியில் 42 சதவீதத்தை உதிரிப் பாகங்கள் பிடித்துள்ளன. மொத்த உதிரிப்பாக ஏற்றுமதியில் இறுதித் தயாரிப்புகள் 2000 – 2016 வரையில் 59  சதவீதமாக இருந்தது. அது இரண்டே ஆண்டுகளில் 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. உதிரிப் பாகங்களின் உலக ஏற்றுமதியில் ஆசியாவின் பங்கு 2000 ஆண்டில் 37 சதவீதமாக இருந்தது, 2018 ஆண்டில் 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் தெற்காசியாவின் பங்கு வெறும் 3 சதவீதம்தான். எதிர்காலத்தில் அதில் வளர்ச்சி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.    

எனவே, உதிரிப் பாகம் மற்றும் அசெம்பிளிங் செய்யும் தொழில்துறைகளில் பள்ளிக்கல்வி மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலம் வளர்ச்சியைப் பெறமுடியும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த ஆய்வுக்கட்டுரைகளின் நோக்கம் பற்றி எம்ஐடிஎஸ் இயக்குநர் பாபுவிடம் பேசினோம். “புதிய டேட்டாக்கள் நமக்குக் கிடைக்காத நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி பேராசிரியர்கள் எழுதிவருகிறார்கள். என்ன கொள்கை முடிவுகள் எடுக்கலாம். உடனே செய்யவேண்டியது என்ன என்பது பற்றிய கணிப்புகளை வழங்குகிறார்கள். இந்தக் கட்டுரைகள் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியம். எங்கள் பேராசிரியர்கள் அந்தந்த துறைகளில் அனுபவம் பெற்றவர்களாக இருப்பதால், அவர்களுடைய ஆய்வு முடிவுகள் சமூகம் மற்றும் தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக அமையும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com