தமிழ்நாடு
திரையரங்குகள், பார்களுக்கு அனுமதியில்லை - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
திரையரங்குகள், பார்களுக்கு அனுமதியில்லை - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. முதல் அலையின் போது ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பு 6,950 பேர் என்று இருந்த நிலையில் இரண்டாவது அலையின் ஒரு நாள் உச்சம் இரண்டு மடங்காகி இருக்கிறது. ஏற்கனவே இரவு நேர கட்டுப்பாடு , ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என கொரோனா பரவலை தடுக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து , வணிக வளாகங்கள், தியேட்டர்களை குறிப்பிட்ட காலத்திற்கு மூடுவது உள்ளிட்ட மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தமிழகத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதியில்லை.
- பெரிய கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.
- தனியாக செயல்படுகிற மளிகைக்கடைகள் போன்ற சிறிய கடைகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கம்போல் செயல்படும் என்றும், 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்
- சென்னை உட்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
- அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
- விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும்.