புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்க கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

