தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் உறுதி: மத்திய அரசு
தமிழகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை வேறு இடத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் ஜிதேந்திர சிங் இதைத் தெரிவித்துள்ளார். தேனி அருகே பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினா ஆய்வகம் அமைக்கும் திட்டம் தொடரும் என்று கூறியுள்ள அவர், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டில் தேனி மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்து 200 பேர் பங்கேற்றதாகவும், அப்போது நியூட்ரினோ ஆய்வக திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். அனைத்து தரப்பினரின் ஒப்புதலைத் தொடர்ந்து திட்டப் பணிகளைத் தொடர ஆட்சியர் அனுமதி அளித்ததாகவும், இதையடுத்து 2015 மே மாதம் 22ஆம் தேதி தமிழக மாசுக் கட்டுப்பாடு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பாக நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுந்தரராஜன் தொடர்ந்த வழக்கும் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில் தமிழகத்தில் இருந்து நியூட்ரினோ திட்டத்தை இடம் மாற்றும் திட்டம் இல்லை என்றும் மக்களவையில் அவர் தெரிவித்துள்ளார்.