"கொல்-Kill, பேச்சு-Speech" தமிழ் - ஆங்கிலம் குறித்த சீமான் பேச்சுக்கு எழும் விமர்சனங்கள்!

"கொல்-Kill, பேச்சு-Speech" தமிழ் - ஆங்கிலம் குறித்த சீமான் பேச்சுக்கு எழும் விமர்சனங்கள்!
"கொல்-Kill, பேச்சு-Speech" தமிழ் - ஆங்கிலம் குறித்த சீமான் பேச்சுக்கு எழும் விமர்சனங்கள்!

தமிழ் மொழி குறித்தும், தமிழ் மொழியில் இருந்து எப்படி ஆங்கிலச் சொற்களை உள்வாங்கி உருவாக்கினர் என்பது குறித்தும் பேசியிருந்த சீமானிற்கு, நெட்டிசன்கள் பலர் எதுகை, மோனைக்காக எதையும் ஆராயாமல் பொதுவெளியில் பேசுவது அர்த்தமற்ற அரசியல் என்று விமர்சனம் செய்துவருகின்றனர்.

ஆங்கிலம் எப்படி வந்தது?

உலகின் பழமையான மொழிகளான லத்தீன், கிரீக், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்டவற்றின் கண்டுபிடிப்புகள் யாவும், தழைத்தோங்க தொடங்கிய காலத்தில் அறிவியல் மொழிகளாக இருந்து வந்தன. ஒருகட்டத்தில் உலகின் பெரும்பகுதியை ஆண்டு வந்த பிரிட்டன் பேரரசால் ஆங்கிலம் அனைத்து இடங்களிலும் கோலோச்சத் தொடங்கியது. இந்த மொழியானது ஆங்கிலேயர்கள் வர்த்தக, ராணுவ ரீதியாக தொடர்பு வைத்திருந்த பல்வேறு நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழி சொற்களை உள்வாங்கிக் கொண்டது. இதற்கு உலகின் பழமையான மொழிகளுள் ஒன்றாக தனித்து விளங்கும் ‘தமிழும்’ விதிவிலக்கல்ல.

ஒரு கணிப்பின்படி, உலகில் 146 மொழிகளில் இருந்த சொற்களை, ஆங்கிலம் தமக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. இதன் விளைவாக ஆங்கிலமே இன்றளவும் அறிவியல் மொழியாக திகழ்ந்து வருகிறது. உலக அரசியலும், வணிகமும் இன்று பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல மொழிகள் அழிந்தும், சில மொழிகள் வளர்ந்தும் வருகின்றன.

இதன் தாக்கத்தை புரிந்து கொண்ட பல்வேறு உலக நாடுகளும், தங்களது தாய் மொழியை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்டி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பல நாடுகள் ஆங்கிலத்தை இரண்டாவது அலுவல் மொழியாக அங்கீகரித்துள்ளன. ஆங்கிலத்தை முற்றிலும் தவிர்த்து இயங்க முடியாது என்பதே எதார்த்தம் என்பதை அறிந்திருந்தும், உலக அளவில் இந்த விவகாரத்தை கையிலெடுத்து பல்வேறு கட்சிகள் அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘செஞ்சமர்’ படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆங்கில மொழி குறித்து விமர்சித்து பேசியது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.

“ஆங்கிலத்தை பயன்படுத்தாமல் தமிழை பயன்படுத்துங்கள்!”- சீமான்

அதில் பேசிய சீமான், “விழாவில் பங்கேற்க எனக்கு தமிழில்தான் அழைப்பிதழ் கொடுத்தனர். ஆனால், இங்கே போஸ்டரில் செஞ்சமர் என்ற தலைப்பை தவிர, மற்ற அனைத்தும் ஆங்கில வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறது. நாம் என்ன படத்தை அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவிலா வெளியிட போகிறோம்? தமிழிலேயே எழுதி இருக்கலாமே...

எல்லா மொழிகளும் மனிதர்களால்தான் பேசப்பட்டது. ஆனால், என்னுடைய மொழி மட்டும்தான் இறைவனால் பேசப்பட்டது. எங்களுடைய மூதாதையர்கள் சிவனும், முருகனும் பேசிய மொழி தமிழ்மொழி. கூடுமானவரை தாய்மொழி தமிழை காப்பாற்ற போராட வேண்டும். எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியில் சொற்கள் இருக்கிறது. அப்படியிருக்கும் போது ஆங்கிலத்தை பயன்படுத்துவது ஏன்?.

தமிழிடம் இருந்து சொற்களை உள்வாங்கி கொண்ட பிச்சைக்கார மொழி ஆங்கிலம்!

நீங்கள் பயன்படுத்தும் இங்கிலீஷ் நான் (தமிழ்) போட்ட பிச்சை. ஆயிரக்கணக்கான சொற்கள் என்னிடமிருந்து கடனாக வாங்கி உருவாக்கப்பட்ட மொழி இங்கிலீஷ். ‘கொல் - கில்(Kill), காசு - கேஷ் (cash), கலாச்சாரம் - கல்ச்சர்(culture), உடன் - சடன்(sudden), பேச்சு - ஸ்பீச்(speech), பஞ்சு - ஸ்பாஞ்(sponge), தாக்கு ஒரு சேர்த்து - அட்டாக் (attack). இப்படி அவர்களே ஒரு பிச்சைக்கார மொழியை வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் நீ, அவன் மொழியில் எழுதிக் கொண்டிருக்கிறாய்.

வெள்ளைக்காரனே தமிழ் படித்துவிட்டு அழகாக தமிழில் பாடம் கற்பிக்கிறான். கால்டுவெல், வீரமாமுனிவர் என நமது ஊருக்கு வந்தவர்கள் அனைவரும், தமிழை படித்துவிட்டு நூல் எழுதி வைத்து சென்றுள்ளனர். நாம் அவர்களது தாய்மொழியில் பேசிக்கொண்டிருக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தெரிவித்த பல ஆங்கில வார்த்தைகள், தமிழ் மொழியிலிருந்து உள்வாங்கிக் கொள்ளப்பட்டதல்ல; எதுகை, மோனையுடன் இருக்க வேண்டுமென சீமான் தமக்கு தோன்றியதை மேடையில் பேசியிருக்கிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். உண்மையில் அந்த ஆங்கில வார்த்தைகள் எந்த மொழியிலிருந்து, ஆங்கிலத்தால் உள்வாங்கிக் கொள்ளப்பட்டவை என்பது குறித்து கீழே காண்போம்.

கில் (Kill)

இது கிறிஸ்துவின் 1200 அல்லது 1300-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத குறிப்புகளில் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வருகிறது. இது ப்ரோட்டோ-ஜெர்மானியத்தில் ‘கொலை செய்’ என்பதைக் குறிப்பிடும் ‘குவல்ஜனனின்’ எனும் வார்த்தையில் இருந்து தோன்றியது ஆகும். பின்னர் இந்த சொல் பழைய ஆங்கிலத்தில் ‘க்வெலன்’ என குறிப்பிடப்பட்டது. பழைய நோர்ஸ் மொழியில் ‘க்வெல்ஜா’ என்பது சித்திரவதையையும், மத்திய டச்சில் ‘க்வெலன்’என்பது கிண்டலையும் குறிக்கும்.

‘கில் (Kill)’ எனும் வார்த்தை 1610-ல் ‘ரத்து செய்தல் அல்லது நடுநிலையாக்குதல்’, 1728-ல் ‘இயந்திரங்கள்’, 1886-ல் ‘விளக்குகள்’, 1934 முதல் ‘ரம்’ என்பதற்கான பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1818-ம் ஆண்டு கீட்ஸ் எழுதிய கடிதத்தில், ‘கவர்ச்சிகரமான உடை’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

கல்ச்சர் (culture)

இது கிறிஸ்துவின் 15-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் லத்தீனில் உள்ள ‘கல்ச்சுரா (cultura)’எனும் வார்த்தையில் இருந்து தோன்றியது ஆகும். இது லத்தீனில், ‘நிலத்தை உழுதல், பயிர்களுக்காக பூமியை தயார் செய்தல்’ என பொருள்படும். 1796-ல் ‘மீன், சிப்பிகள்’ போன்றவை இவ்வாறு அழைக்கப்பட்டன. 1805-ல் ‘கற்றல், சுவை, நாகரிகத்தின் அறிவுசார் பக்கம்’, 1867-ல் ‘ஒரு மக்களின் கூட்டுப் பழக்கவழக்கங்கள், சாதனைகள், கூட்டு அறிவுசார் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட வடிவம்’ஆகியவற்றை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது.

சடன் (sudden)

இது கிறிஸ்துவின் 14-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில், பழைய ப்ரெஞ்சின் ‘சோடெய்ன் (sodain)’, ‘சப்டைன் (subdain)’ ஆகிய சொற்களிலிருந்து தோன்றியவை ஆகும். லத்தீனில் ‘கீழே செல், ரகசியமாக நிகழும், திருட்டுத்தனமாக மேலே செல்’ ஆகியவற்றை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. 1550-களில் வழக்கற்றுப்போன இந்த சொல், 1680-களில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. 1834-ல் நாணய சுழல்களைப் பற்றிய குறிப்புகளிலும் பயன்படுத்தப்பட்டன.

ஸ்பீச்(speech)

இது ப்ரோட்டோ-ஜெர்மானியத்தில் உள்ள ஸ்ப்ரெக் (sprek) எனும் சொல்லிலிருந்து தோன்றியது ஆகும். பின்னர் பழைய ஆங்கிலத்தில் “பேசும் செயல், பேசும் ஆற்றல், பேசும் விதம், அறிக்கை, சொற்பொழிவு, கதை, முறையான உச்சரிப்பு, மொழி” ஆகியவற்றைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. டேனிஷில் ‘ஸ்ப்ரோக் (sprog), டச்சில் ‘ஸ்ப்ராக் (spraak)’, ஓல்ட் ஹை ஜெர்மனில் ஸ்ப்ராஹா (sprahha) எனும் சொற்களும் பேச்சு என்பதைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டன.

மேற்கண்டதைப் போன்று, சீமான் பேசியதில் ‘கேஷ் (cash)’எனும் வார்த்தையைத் தவிர பிற சொற்கள் அனைத்துமே வேறு பிற மொழிகளில் இருந்து, ஆங்கிலத்தில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டவை ஆகும். தமிழில் இருந்து உள்வாங்கிக் கொள்ளப்பட்டவை அல்ல. இதனை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் பலரும், “தமிழ் மொழியை காக்க வேண்டும் என்பதற்காக மேடையில் பேசுவதில் தவறில்லை; ஆனால், அதற்காக பிற மொழிகளை தரம் தாழ்த்தி பேசுவது அறமாகாது. எதுகை, மோனைக்காக, எதையும் ஆராயாமல் பொதுவெளியில் பேசுவது அர்த்தமற்ற அரசியல்” என விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

- ராஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com