தொடரும் கொலைகள்.. அவிழாத மர்மங்கள்.. எடப்பாடி பழனிசாமியை பயமுறுத்துகிறதா கோடநாடு வழக்கு?

தொடரும் கொலைகள்.. அவிழாத மர்மங்கள்.. எடப்பாடி பழனிசாமியை பயமுறுத்துகிறதா கோடநாடு வழக்கு?
தொடரும் கொலைகள்.. அவிழாத மர்மங்கள்.. எடப்பாடி பழனிசாமியை பயமுறுத்துகிறதா கோடநாடு வழக்கு?

''கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் நமக்கெல்லாம் தெரியாத ஒரு விஷயம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது'' என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு அவருக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் இருக்கும் எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர். இவர் கொள்ளை சம்பவத்திற்கு பின் விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார். இவரின் மரணத்தை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் வெவ்வேறு தருணங்களில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் கடந்த வாரம் சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். இப்படி 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கோடநாடு காவலாளி கொலை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இச்சூழலில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. கோடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் உள்ளிட்டோர் குரலெழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து புதிய தலைமுறையின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் ஷ்யாம், ''அரசியலில் சீறும் பாம்பாக இருப்பவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவதையும் நான் பார்க்கிறேன். அதேபோல் அரசியலில் உயரம் தொட்டவர்களின் பின்னால் துரோகங்களும் குற்றங்களும் ஒளிந்து கிடப்பதையும் நான் பார்க்கிறேன். அதிமுகவில் திடீரென்று இந்த ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுவதற்கு காரணம் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு பற்றிய அச்சம்தான். இந்த அச்சம் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரை சார்ந்தவர்களிடம் இருக்கிறது. காரணம் அவர்தான் முதன்முதலில் சட்டமன்றத்துக்கு வெளியே வந்து கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் என் பெயரை சேர்த்துவிட முயற்சி நடக்கிறது என்று சொன்னார். இதிலிருந்து நமக்கெல்லாம் தெரியாத ஒரு விஷயம் அவருக்கு தெரிந்திருக்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது.

அரசியல் எப்போதுமே நல்ல நாட்கள் உண்டு; மகிழ்ச்சியைத் தரும். பொல்லாத நாட்கள் உண்டு; அனுபவத்தை தரும். ஆகச்சிறந்த நாட்கள் என்பது அரிதிலும் அரிது. எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது மகிழ்ச்சியை தராத நாட்கள் இவை என்றுதான் நான் கருதுகிறேன். கோடநாடு வழக்கு அவரை பயமுறுத்துகிறது என்றும் நான் உணர்கிறேன்'' என்கிறார் அவர்.  

பத்திரிகையாளர் பிரியன் கூறுகையில், ''கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையின்போது சயான், எடப்பாடி பழனிசாமி பெயரை சொன்னார் என்பது ஒரு யூகமாகத்தான் இருந்தது. ஆனால் தன்னை இந்த வழக்கில் தொடர்புபடுத்த சதி நடப்பதாக எடப்பாடி பழனிச்சாமி சொன்னது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் போக்கு உள்ளது.  

அதிமுகவினர் தங்களுடைய தலைவியாக பெரிதும் மதிக்கிற ஜெயலலிதாவின் வீட்டில் கொள்ளை நடந்ததை ஆட்சியில் இருந்த இவர்கள் பார்க்கவும் இல்லை. அதைப்பற்றி சீரியசாக விசாரிக்கவும் இல்லை. சீரியசான விஷயம் என்று சொன்னவர்களை 'உள்ளே' தள்ளினார்கள். ஆட்சி மாறியதும் திமுக அரசு மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த மறு விசாரணையே ஓராண்டாக மிகவும் தாமதமாக நடக்கிறது.

ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஏன் தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார் என்றால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தான் சிக்க வைக்கப்படுவோம் என்றும் தன்னிடம் கட்சி இருந்தால் ஒரு பின்புலம் இருக்கும் என நினைக்கிறாரோ என்னவோ எனத் கேட்கத் தோன்றுகிறது. அதை முறியடிக்கும்விதமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கிறவர்கள் கோடநாடு வழக்கு விசாரனையை துரிதப்படுத்த வேண்டும் என கிளப்பி விடுவது ஆச்சரியப்படுவதற்கில்லை'' என்கிறார் அவர்.

'விவாதமாகும் கோடநாடு விவகாரம் - அதிமுக உட்கட்சி மோதல் காரணமா?' முழு வீடியோவை கீழே காணலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com