குளங்களின் தோழி, பிளாஸ்டிக்கின் எதிரி: வலம் வரும் சங்கரி!
நெல்லையில் குளங்களின் தோழியாகவும், பிளாஸ்டிக் பொருட்களின் எதிரியாகவும் வலம் வருகிறார் இளம்பெண் ஒருவர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ஊரைச் சேர்ந்தவர் சங்கரி. இயற்கை மருத்துவம் முடித்த சங்கரிக்கு 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பும், அதனால் ஏற்பட்ட இழப்புகளுமே நீரும், அதன் தேவை குறித்தும் தன்னுள் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியதாக கூறுகிறார். கேள்வியோடு மட்டும் நின்றுவிடாமல், அதற்கான விடையையும் தேடி சங்கரி பயணிக்கத் தொடங்கினார். அதன்விளைவே, சிவந்திபுரம் எனும் கிராமத்தின் சாலையோரம் உள்ள அலங்காரியம்மன் குளத்தை மீட்டெடுத்தது.
குப்பைகளாலும், கழிவுகளாலும் பாழடைந்து காணப்பட்ட அலங்காரியம்மன் குளத்தை 2016ம் ஆண்டு தூர்வாரும் பணியை தொடங்கினார் சங்கரி. முதற்கட்டமாக குளத்தைச் சுற்றி 12 குப்பைத்தொட்டிகள் வைத்து, ஆகாயத்தாமரைகளை அகற்றி அந்த குளத்தில் தண்ணீர் சேமித்து வைப்பதற்கான சாத்தியங்களை சங்கரி ஏற்படுத்தியுள்ளார். இவரின் தொடர் முயற்சியால் அரசு உதவியுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியும் குளத்தினுள் கட்டப்பட்டு வருகிறது. குளங்களை மீட்டெடுப்பது மட்டுமின்றி நெகிழி இல்லா நிலையை உருவாக்கும் முயற்சியையும் அவர் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், பயிற்சிகளையும் அவர் வழங்கி வருகிறார்.