மூவர் கொலை வழக்கு.. தாமிரபரணி ஆற்றில் ஆயுதங்களை தேடும் போலீஸ்..!
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை தொடர்பாக, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தாமிரபரணி ஆற்றில் போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23-ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர். நெல்லை ரெட்டியார்பட்டியில் இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றது. மூவர் கொலை தொடர்பாக, திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருவதாக தெரிகிறது. கொலைக்கு பயன்படுத்தியதாக கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அந்த கார், உமா மகேஸ்வரி வீட்டின் முன்பு அடிக்கடி சென்றுவந்தது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தாமிரபரணி ஆற்றில் கொலையாளிகள் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் அந்த ஆயுதங்களை தாமிரபரணி ஆற்றில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.