நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கும் வழக்கு
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியை எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரிய வழக்கு. அரசுத் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனியைச் சேர்ந்த கனகமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் எஸ்சி பிரிவினருக்கும், 21 நகராட்சி மற்றும் 88 பேரூராட்சிகளை எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் ஒதுக்கீடு செய்யவில்லை.
இது பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல பேரூராட்சிகள் இருந்தும் ஒன்று கூட எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கவில்லை. எஸ்சி-எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு இல்லை. எனவே, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியை எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கிய அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியை எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்குமாறு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, ஸ்ரீமதி அமர்வு வழக்கு குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.