இயற்கை விவசாயத்தை மீட்கும் நெல்லை மாணவர்கள்

இயற்கை விவசாயத்தை மீட்கும் நெல்லை மாணவர்கள்

இயற்கை விவசாயத்தை மீட்கும் நெல்லை மாணவர்கள்
Published on

தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்த விவசாயத்தை இயற்கை முறையில் கல்வியோடு சேர்த்து மீட்டெடுத்து வருகிறார்கள் நெல்லை கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள். 

விளையும் பயிர் முளையிலேயே  தெரியும் என்பது பழமொழி, ஆனால் விளையும் பயிர்களான மாணவர்களை கொண்டே அப்பயிர்களை விளைவிக்க செய்வது புதுமொழி, இப்புதுமையை செயல்படுத்தி கொண்டிருப்பது நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி. 1960 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி. கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் “பள்ளி காய்கறி திட்டம்” என்ற புதுமையான திட்டம் முதன்முறையாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இத்திட்டத்திற்கு தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலமாக வேலி இடுதல், மற்றும் இதர கட்டுமான பணிகளுக்கான செலவுகள் 14வது நிதி ஆணைய நிதியின் மூலமாகவும், விதைகள் தோட்ட கலை துறை மூலமாகவும், தண்ணீர் ஊரகவளர்ச்சி துறை மூலமாகவும் என பல திட்டங்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புதுமையான முயற்சியாக பள்ளி வளாகத்தில் காய்கறிகளை வளர்க்கும் திட்டமாக செயல்படுத்தபட்டது.

பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று காய்கறிகளை இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்த்து வருகின்றனர். விவசாயத்தை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக செய்முறை பயிற்சியுடன் படிப்பதால் அறிவியல் திறனும் வளர்வதாக கூறுகின்றனர் மாணவ, மாணவிகள், மேலும் மாணவர்களுடன் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதுடன், பெற்றோர்களிடம் சொல்லி வீடுகளிலும் தோட்ட திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.

நாளொன்றுக்கு 10 கிலோ முதல்15 கிலோ வரை காய்கறிகள் விளைச்சலாக கிடைக்கிறது. இதில் தங்கள் பள்ளிக்கு சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்தியது போக மீதம் இருக்கும் காய்கறிகளை அருகில் உள்ள பள்ளிகளுக்கும், மாணவர்களின் வீடுகளுக்கும், மற்றும் அருகிலுள்ள சந்தைக்கும் மலிவு விலைக்கு கொடுத்து அதில் கிடைக்கும் தொகையை தோட்டத்தை பராமரிக்க செலவு செய்கின்றனர்.

மாற்றத்திற்கான தேடல் என்பது வெளியே தேட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் தங்கள் பள்ளியிலேயே சாதித்து காட்டி வரும் மாணவர்கள், மற்ற பள்ளிகளுக்கு உதாரணங்கள். இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இத்திட்டத்தினை செயல்படுத்தினால் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களையும் அதன் ஆதாரமான விவசாயத்தையும் இயற்கை முறையில் மீட்டெடுக்க முடியும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நம்பிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com