முன்னாடி ஒரு கார் பின்னாடி ஒரு கார்.. நகை வியாபாரி மீது மிளகாய்ப் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளை!

நெல்லை அருகே, நகை வியாபாரி மீது மிளகாய்ப் பொடியைத் தூவி இரும்புக் கம்பியால் தாக்கி ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த சுஷாந்த், நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்குத் தனது காரில் 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவரது காரை கண்காணித்தபடி முன்னும் பின்னும் 2 கார்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்தனர். நாங்குநேரி அருகே சுஷாந்தின் காரை வழிமறித்த அந்தக் கும்பல், கார் கண்ணாடியை உடைத்து உள்ளேயிருந்த ஒன்றரை கோடி ரூபாயை கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது அவ்வழியே வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் சேர்ந்து கொள்ளையர்களை விரட்டினர். சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள், சுஷாந்த்தை தங்களது காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு காரையும் கடத்தினர்.

சிறிது தூரம் சென்றபின், அந்தக் கும்பல் சுஷாந்தை கீழே இறக்கிவிட்டுவிட்டு, அவரது காரைக் கடத்திச் சென்றது. காரை ஓரிடத்தில் நிறுத்தி பணத்தை அள்ளிக்கொண்டு அக்கும்பல் தப்பிச் சென்றது. சம்பவம் குறித்து நாங்குநேரி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பின்னர் சுஷாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதால், காரில் கொண்டு சென்றது கறுப்புப் பணமா என காவல் துறைக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com