
களக்காடு அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இளம் பெண் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் லேகா (23). இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக மகளையும் மருமகனையும் முருகன் சிதம்பராபுரத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது களக்காடு பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பராபுரத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கனமழை காரணமாக பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மூன்று பேரும் நடந்து பாலத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது காட்டாற்று வெள்ளத்தில் மூன்று பேரும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், முருகனும் பரமேஸ்வரனும் பத்திரமாக கரை சேர்ந்து விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த களக்காடு போலீசார் மற்றும் நாங்குநேரி தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லேகாவை இரவு முழுவதும் தேடினர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் லேகா சடலமாக மீட்கப்பட்டார்.