விபத்தில் கை, கால் உடைந்தால் என்ன ஆகும் ? - பைக் ரேஸர்களுக்கு கண்முன் காட்டிய காவல்துறை
பைக்ரேஸ் சென்ற இளைஞர்களை பிடித்து மருத்துவமனையின் எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச்சென்று நெல்லை காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.
நெல்லை மாநகரில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வதை தடுக்க காவல்துறையினர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பைக் ரேஸ் சென்ற 11 இளைஞர்களை நெல்லை காவல்துறையினர் பிடித்தனர். ரேஸுக்கு பயன்படுத்திய பைக்குகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் இளைஞர்களுக்கு விபத்து நேர்ந்தால் என்ன ஆகும் ? என்ற நிலையை புரிய வைக்க நினைத்த காவல்துறையினர், அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
மருத்துவமனையில் இருந்த எலும்புமுறிவு சிகிச்சை பிரிவிற்கு அவர்களை கூட்டிச்சென்று, அங்கு கை, கால் முறிவால் கட்டுப்போடப்பட்டு அவதிப்படும் நோயாளிகளை காண்பிடித்தனர். அத்துடன் எலும்பு முறிவால் ஏற்படும் துயரம் குறித்து அங்கிருந்த மருத்துவர்கள் இளைஞர்களுக்கு விளக்கமளித்தனர். விபத்துகள் நேர்ந்தால் குடும்பத்தினரின் நிலை என்ன ஆகும் ? என்று காவல்துறையினர் எடுத்துக்கூறினர். மேலும், விபத்துகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும் அறிவுறை வழங்கினர். பின்னர் இளைஞர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பிவைத்தனர். நேரடியாக இளைஞர்கள் விபத்துக்களின் விளைவை அறிந்துகொள்ள இப்புதிய முயற்சி காவல்துறையால் கையாளப்பட்டுள்ளது.