காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுப்பு: தொடர்கிறது உறவினர்களின் போராட்டம்

காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுப்பு: தொடர்கிறது உறவினர்களின் போராட்டம்
காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுப்பு: தொடர்கிறது உறவினர்களின் போராட்டம்

நெல்லையில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்று கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நம்பியாற்றில் நேற்று முன்தினம் இரவு மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் துரை, கொள்ளையர்களால் இரும்புக் கம்பி கொண்டு தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முருகன் உள்ளிட்ட மேலும் முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது நாளாக காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், மனைவிக்கு கல்வித்துறையில் அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும், இதில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணியில் உள்ள காவலரின் குடும்பத்தாருடன்  நாங்குநேரி ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் காவலர் ஜெகதீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. சட்டங்கள், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.  நிவாரணத் தொகை 1 கோடி வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்” என தெரிவித்தார். காவலர் ஜெகதீஷ் துரை மரணத்திற்கு காரணமானவர்களை பிடிக்க 7 ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com