தொடரும் கைதிகள் தற்கொலை : நெல்லையில் ஒருவர் பலி!
நெல்லை, பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி, சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சார்ந்த ஏசுதாசன் மகன் பாரத் (வயது 37). இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆயுள் தண்டனை கைதியான இவர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அவரது அண்ணன் தனசேகரன் திருமண விழாவிற்கு பரோலில் சென்றுள்ளார்.
பரோல் காலம் 25ஆம் தேதி வரை இருந்துள்ளது. இதற்கிடையே இவர் கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட காவல்துறை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, பாரத் மற்றும் அவரது அண்ணனை கலவரம் ஏற்படுத்தியதாக போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சொந்த ஜாமீனில் வெளிவந்த அவரை, பரோல் முடியும் தேதியில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் மீண்டும் காவல்துறையினர் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையின் ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்கிட்டு பாரத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? இல்லை யாரேனும் கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.