நெல்லை | தெரு நாய்கள் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம்
செய்தியாளர்: இ.முத்தப்பாண்டியன்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அதிக அளவிலான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்களால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தியும் வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கல்லிடைக்குறிச்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் கடித்துள்ளன.
இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .இரண்டு வயது சிறுவன் உட்பட சிறுமி, முதியவர்கள் பெண்கள் என பத்துக்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்துள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து நாய் ஒருவரை கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.