நிச்சயதார்த்தம் போய்விட்டு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நிச்சயதார்த்தம் போய்விட்டு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
நிச்சயதார்த்தம் போய்விட்டு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நெல்லையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு வீட்டில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. 

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த வடகரை, மேட்டுகால் ரோட்டில் வசிப்பவர் முகம்மது ஆதம். இவர் புளியரை அருகே உள்ள புதூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று இவரது மனைவி சாரல் பீவியின் உறவினர் ஒருவருக்கு, களக்காடு அடுத்துள்ள புது நகரம் என்ற ஊரில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் புறப்பட்டு புது நகரம் சென்றுள்ளார் முகம்மது. நிச்சயதார்த்தம் முடிந்த பின் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அங்கேயே தங்கியிருந்து ஊரை சுற்றிப் பார்த்துள்ளனர். 

பின்னர் குடும்பத்துடன் புறப்பட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் வந்து பார்த்த அந்தக் குடும்பத்தினர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. உடனே இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். அத்துடன் கைரேகைப் பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தக் கொள்ளையில் 180 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகம்மது தனது உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்த நேரத்தில் இந்தக் கொள்ளை நடைபெற்றிருப்பதால், அவர் தொடர்பான தகவல்களை அறிந்த ஒருவர் இந்தக் கொள்ளை சம்பவத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகத்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறுவதால், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com