நெல்லை | அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு - பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சோகம்
செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேரூந்தில் ஓட்டுநராக புளியங்குடியைச் சேர்ந்த மாரியப்பன் (48) என்பவர் பணியில் இருந்தார். அப்போது இந்த அரசு பேருந்து நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு வள்ளியூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பொத்தையடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் மாரியப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது .இதையடுத்து அவர், பேருந்தை சாலையின் ஒரமாக நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாரியப்பனை மீட்டு ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரியப்பன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தனக்கு மாரடைப்பு ஏற்பட்டும் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்று அரசு பேருந்தை சாலையின் நிறுத்தி ஒட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.