
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த மணிமுத்தாறு அருகே அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (55). இவரது மகன் வனராஜ் (28) விவசாயிகளான இவர்கள் இருவரும் மணிமுத்தாறு 40அடி கால்வாய் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு நேற்று நள்ளிரவு தண்ணீர் பாய்ச்சச் சென்றுள்ளனர்.
அப்போது மணிமுத்தாறு மீன்வளத்துறை அலுவலகம் அருகே உள்ள 40 அடி கால்வாயை கடக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து தண்ணீரில் மிதந்ததாகக் கூறப்படுகிறது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதையடுத்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய மணிமுத்தாறு போலீசார், பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வேட்டையாடுவதற்காக கால்வாய் தண்ணீரில் மர்ம நபர்கள் மின்சாரத்தை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறியாத விவசாயிகளான தந்தை மகன் இருவரும் அதில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தண்ணீரில் மின்சாரத்தை செலுத்தியதாக இருவரை பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.