தனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் !
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் தனது குழந்தையை சேர்த்து படிக்க வைத்து வருகிறார் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
வசதி படைத்தவர்கள் தங்களது குழந்தையை அதிகம் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்க்கும் சூழலில் அரசு அங்கன்வாடி பள்ளியில் தனது குழந்தையை சேர்த்து உள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஸ் கடந்த ஆண்டு மே மாதம் 25 ம் தேதி பொறுப்பேற்றார். நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரான ஷில்பா, மாவட்டத்தில் பல அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் நெல்லை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற நிலையில் தனது குழந்தை கீதாவை நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
இங்கு படித்து வரும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரின் குழந்தை ஆர்வத்துடன் ஆடி பாடி, தரையில் அமர்ந்து படித்துவருகிறது. மொத்தம் 20 குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வரும் நிலையில் தினமும் நாள் தவறாமல் ஆட்சியரின் குழந்தை கீதாவும் பள்ளிக்கு வந்து விடுவார் என அங்கன் வாடி ஆசிரியர் கூறுகிறார். அனைவரும் அதிகம் செலவு செய்து தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்துவரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து மூடப்படும் சூழல் வருகிறது. அரசு பள்ளிகளை நம்பியே ஏழை மாணவர்களின் எதிர்காலம் இருக்கும் சூழலில் அரசு பள்ளிகளில் தனது குழந்தையை சேர்த்து படிக்கவைக்கும் மாவட்ட ஆட்சியரின் முன்மாதிரி செயல் அனைத்து மக்களின் இடத்தில் பாரட்டை பெற்றுள்ளது.