நீட் தேர்வு: ஆடை கட்டுப்பாடுகளால் மாணவிகள் கடும் அவதி
நீட் தேர்வெழுத சென்ற மாணவிகள் துப்பட்டா அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது பெற்றோரையும் மாணவிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களுக்குள் செல்லும் முன்பு மாணவிகள் கடுமையாக சோதிக்கப்பட்டனர். சென்னை கோபாலபுரத்தில் தேர்வு மையத்தினுள் துப்பட்டா அணிந்து மாணவிகளை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. மாறாக துப்பாட்டாவை அகற்றினால் தான் மையத்தினுள் அனுமதிப்போம் என தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கூறியதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆடைக் கட்டுப்பாட்டில் துப்பட்டா குறித்து எதுவும் கூறப்படாத நிலையில், திடீரென துப்பட்டாவை அகற்ற கூறுவதாக மாணவிகளும், பெற்றோரும் குற்றம்சாட்டுகின்றனர். இஸ்லாமிய மாணவிகள் தலையை மறைக்கும் பர்தாவை அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆடை கட்டுப்பாடுகள் குறித்து முன்கூட்டியே தெளிவான விளக்கம் அளித்திருந்தால் சங்கடங்களை தவிர்த்திருக்கலாம் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.