நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் : யார் யாருக்கெல்லாம் தொடர்பு?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் : யார் யாருக்கெல்லாம் தொடர்பு?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் : யார் யாருக்கெல்லாம் தொடர்பு?
Published on

புதிய தலைமுறை அம்பலப்படுத்தியுள்ள நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்த புகாரில், தனிப்படை காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்விகாரத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எந்தத் தேர்விலும் இல்லாத அளவுக்கு உச்சகட்ட சோதனைகளுக்கு மத்தியில் நடத்தப்படும் நீட் தேர்விலேயே, சர்வசாதாரணமாக ஆள்மாறாட்டம் நடந்திருப்பதுதான், மருத்துவத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், தேர்வில் முறைகேடு செய்து, தேனி மருத்துக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரை, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது, புதிய தலைமுறை. மும்பையில் உள்ள தேர்வு மையத்தில் வேறொரு மாணவர் தேர்வெழுதி தேர்ச்சி பெற, அந்த ஆவணங்களை கொண்டு சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால் அதை முற்றுலுமாக மறுத்திருக்கிறார், அவரின் தந்தை வெங்கடேசன்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்த விவகாரம் தீயாக பரவ, மாணவரின் ஆவணங்கள் அனைத்தையும், மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது, தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம். இதுகுறித்த புகாரில், மாணவர் உதித் சூர்யா மீது, அவருக்குப் பதிலாக தேர்வு எழுதியதாக கூறப்படும் நபர் மீதும் வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல்துறை. அவர்கள் மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், ஆள்மாறாட்டம், கூட்டு சதி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது‌. 

மேலும் அதுகுறித்து விசாரிக்க, ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் உஷா தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவிட்டிருக்கிறது மருத்துவக் கல்வி இயக்குநரகம்.

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் உத்தரவின்பேரில், சம்பவ தொடர்பான‌ விளக்கமளிக்க தேனி அரசு மருத்துவக்கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர் குழுவினர், சென்னை வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே,‌ தனிப்படை காவலர்கள் தேடிச் சென்றபோது, உதித் சூர்யாவோ, அவரின் தந்தையோ வீட்டில் இல்லை. மும்பையில் நீட் தேர்வெழுதிய உதித் சூர்யா அங்குள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்திருக்கிறார். இதன் மூலம், அந்தப் பயிற்சி மையம் மூலம் பலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்களா? ப‌யங்கர கெடுபிடிகளுக்கு இடையில் நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி? கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டபோது புகைப்பட மாறுபாடு குறித்த சந்தேகம் எழுப்பப்படாதது ஏன்? கல்லூரியில் சேர்க்கப்பட்டபோது ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படவில்லையா? என, இவ்விவகாரத்தில் அடிப்படையாக எழும் கேள்விகள், காவல்துறையினரை மேலும் யோசிக்க வைத்திருக்கின்றன. உதித் சூர்யாவுக்குப் பதிலாக தேர்வு எழுதியதாக கூறப்படும் அந்த நபர் சிக்கினால் மட்டுமே, இவ்விவகாரத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com