நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆதாரை கொண்டு வர மறந்த மாணவி ! உடனடியாக உதவிய போலீஸ் !
நீட் தேர்வு மையத்துக்கு அசல் ஆதார் அட்டையை கொண்டு வர மறந்த மாணவிக்கு உடனடியாக உதவிய போலீஸ் ஒருவர் அப்பெண் தேர்வு எழுத உதவிப் புரிந்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மவுனிகா, 17. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று, 'நீட்' தேர்வு எழுதச் சென்றார். தேர்வு மையத்துக்கு அசல் ஆதார் அட்டை எடுக்காமல், அதன் நகலை மட்டும் எடுத்து சென்றதால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆதார் எண்ணுடன், செல்போன் எண் இணைக்கப்படாததால், இணைய வழியாக அசல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்ததால், வீட்டிற்கு சென்று எடுத்து வர நேரமின்றி, என்ன செய்வது என்று தெரியாமல் மவுனிகாவும், அவரது தாய் ஷீலாவும் கண்ணீர் விட்டு அழுதனர். அதைக்கண்ட கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ரமேஷ், ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய காவலர் மகேஷ்வரனை உதவிக்கு அனுப்பினார். அவர், தாய் ஷீலாவை, பைக்கில் ஏற்றிக் கொண்டு, புரசைவாக்கம் நோக்கி சென்றார்.
மாணவியின் தாயை, அவரது வீட்டுக்கு சென்று ஆதார் அட்டையை பெற்றுக்கொண்டு, தேர்வு மையம் நோக்கி, மகேஷ்வரன் திரும்பினார். மதியம், 2 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த நிலையில், 1.30 மணிக்கு ஆதார் அட்டையை மாணவியிடம் ஒப்படைத்தார். தேர்வு முடித்து மகிழ்ச்சியுடன் திரும்பிய மவுனிக்காவை தனது நண்பரின் காரின் மூலம் மீண்டும் புரசைவாக்கம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். காரில் மவுனிக்காவை அனுப்பினாலும் பைக்கில் பின்னாடியே சென்றுள்ளார் மகேஷ்வரன்.
இது குறித்து "தி இந்து" நாளிதழுக்கு பேசிய மகேஷ்வரன் "மவுனிக்கா மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார் என்பதை புரிந்துக்கொண்டேன். முதலில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு அவருக்கு ஆதார் அட்டையை கொண்டு சென்று கொடுத்துவிட வேண்டும் என நினைத்தேன். அது முடிந்ததும் மாணவியை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். மாணவியின் மருத்துவ கனவிற்கு, என்னால் முடிந்த உதவியை செய்தேன்" என தெரிவித்துள்ளார்.