மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழகத்தில் 238 மையங்களில் இன்று நடைபெற்று முடிந்தது.
நீட் தேர்வுக்கு சுமார் 1.18 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் காலை முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். சில இடங்களில் போதிய போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
முகக்கவசம், கையுறை அணிந்து வந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சானிடைசர், நுழைவு அட்டை, அடையாள அட்டை ஆகியவை தேர்வறைக்குள் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டது. கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு அறைகளில் தனி மனித இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது
பல மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழில் எழுதி வைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பெற்றோருக்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பல்வேறு மையங்களில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. பல இடங்களில் மாணவர்கள் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டாலும், உணவு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதிய உணவை உட்கொள்ளாமல் தேர்வை எதிர்கொள்ள நேர்ந்தது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். சில மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாகவும் சிலர் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

