நீட் தேர்வு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து, நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவரப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிப்பார் என மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மத்திய அரசின் கல்விக் கொள்கையில் எதிர்க்க வேண்டியதை தமிழக அரசு எதிர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் வரும் மே 7-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.