NEET
NEETTWITTER

நீட் என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்பு சட்டமல்ல: நீட் தேர்வும் ரத்தாகும் - முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு விலக்கு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பலதரப்பு மக்களும் நீட் தேர்வுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு ரத்தாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நான் நம்பிக்கை இழக்கவில்லை. நீட் தேர்வு என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்பு சட்டமல்ல. நீட் தேர்வும் ரத்தாகும். என்று தனது அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK STALIN
MK STALINFILE IMAGE

அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

”நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசைக் கண்டித்தும் – அதற்குத் துணைபோகும் ஆணவம் பிடித்த ஆளுநரைக் கண்டித்தும் தி.மு.கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டம் மாபெரும் வெற்றி.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், அணிகளின் செயல்வீரர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் பங்கெடுத்தனர்.

நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மக்களின் கோரிக்கையாக இன்று மாறி இருக்கிறது. கட்சி எல்லைகளைக் கடந்து நீட் தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 'INDIA' கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயமாக விலக்கப்படும் என்பது உறுதி; எங்களது புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது.

ஏழை - எளிய - விளிம்பு நிலை - ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதுதான் பா.ஜ.க.வின் உண்மையான நோக்கம்.

ஊழலுக்கு எதிரானவர்களைப் போல நடித்துக் கொண்டு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடிகளில் புரளப் பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருப்பது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாகும். இவர்களது ஊழல் வண்டவாளங்கள்தான் சி.ஏ.ஜி. அறிக்கையில் சிரிப்பாய் சிரிக்கிறதே!

நீட் தேர்வை அ.தி.மு.க.வின் அடிமை ஆட்சிக்காலம் ஆரம்பக் காலத்திலேயே எதிர்த்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. தங்களது நாற்காலி காப்பாற்றப்பட்டால் போதும் யார் நாசமானால் என்ன என்று நினைத்து தரையில் விழுந்து கிடந்தார்கள்.

அரியலூர் அனிதா தொடங்கி - குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்களின் உயிரைக் குடித்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

நீட் என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்புச் சட்டமல்ல. அரசியலமைப்புச் சட்டத்தையே காலில் போட்டு மிதித்தவர்கள் ஒன்றிய பா.ஜ.க.வினர். எனவே, நீட் தேர்வு ரத்தாகும்.

உங்கள் போராட்டம் நமக்கு மேலும் உறுதியை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை” என்று இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

- ஜெனிட்டா ரோஸ்லின் .S

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com