பேருந்தை நிறுத்தவில்லை ! நீட் தேர்வுக்கு சென்ற மாணவி காவல்நிலையத்தில் புகார்
நீட் தேர்வு எழுத சென்றபோது அரசுப் பேருந்துகளை நிறுத்தாத ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நீட் தேர்வு எழுதிய மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஓசூர் அருகேயுள்ள பாரந்துர் கிராமத்தை சேர்ந்த பலராமகிருஷ்ணன் என்பவரின் மகள் சுப்ரியா, இவர் கடந்த 5 ஆம் தேதி இரவு நீட் தேர்வு எழுத தன்னுடைய கிராமத்திலிருந்து பெங்களூருவிற்கு சென்றார். அப்போது பாரந்தூர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவி சுப்ரியா அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்துகளை மறித்துள்ளார். ஆனால் 8.30 மணியிருந்து 9.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் அந்த வழியாக அடுத்தடுத்து சென்ற 3 அரசுப்பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.இதனால் சுப்ரியாவிற்காக ஓசூரில் காத்திருந்த அவரது பள்ளி தோழிகள் அவரை விட்டு விட்டு பெங்களுரு தேர்வு மையத்திற்கு சென்றனர்.
இதனையடுத்து சுப்ரியாவின் தந்தை பலராமகிருஷ்ணன் ஓசூர் பேருந்துநிலையத்திற்கு சென்று போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அரசுப் பேருந்துகள் பாரந்தூர் கிராமத்தில் நிற்காதது குறித்து கேட்டுள்ளார். பின்னர் மகளின் நீட் தேர்வு பாழாகிவிடும் என்ற அச்சத்தில் நள்ளிரவு நேரத்தில் வாடகை கார் ஒன்றை வரவழைத்து அதன் மூலம் மகளை பெங்களுருவிற்கு அழைத்து சென்று தேர்வு எழுத வைத்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்வு எழுத சென்றபோது தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாத அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மீதும் சரியாக பதில் அளிக்காத டைம் கீப்பர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி சுப்ரியா ஓசூர் நகர காவல்நிலையத்தில் குடும்பத்துடன் வந்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஓசூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் தேர்வு நேரத்தில் தானும் தனது தந்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டோம், எனவே அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தேர்வு நேரங்களிலோ,வேலைவாய்ப்புக்கு செல்லும்போது நடந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.