மாணவிகளை அலங்கோலப்படுத்தியதை சகிக்க முடியாது: வைகோ காட்டம்
நீட் தேர்வெழுத மகனை அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்ததற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்க திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவர் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் எர்ணாகுளம் சென்றுள்ளார். மகன் தேர்வெழுத சென்ற நிலையில் விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். தந்தையின் இறப்பு செய்தி தெரியாமல் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதி வந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ தமிழக மாணவ, மாணவிகள் சொந்த நாடு என்று சொல்லப்படும் இந்தியாவிலேயே அகதிகளாக மத்திய அரசால் நடத்தப்படுகின்றனர். மாணவிகளை சோதனை என்ற பெயரில் அலங்கோலப்படுத்தியது சகிக்க முடியாதது. நீட் தேர்வு என்பது மிகப்பெரிய அநீதி. மன உளைச்சலால் தான் கிருஷ்ணசாமி உயிரிழந்துள்ளார். மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் மனிதாபிமானமே கிடையாது. இது குறித்து கேரள ஆளுநரிடம் பேசினேன்” என தெரிவித்தார்.