”நித்தியானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய ஜூடிசியல் சிஸ்டத்தையே சேலஞ்ச் செய்கிறார்” - நீதிமன்றம்
செய்தியாளர்: இ.சகாய பிரதீபா
கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த சுரேகா (நித்தியானந்தாவின் சீடர்) உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதில், 'தேனி மாவட்டம் சேத்தூர் காவல் நிலையத்தில் என்னையும் சேர்த்து 3 நபர்கள் மீது மோசடி பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் கணேசன் என்பவருக்குச் சொந்தமாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், நாங்கள் அது போன்று எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்படுகிறேன்' என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரர் நிலத்தை அபகரிக்கும் செயல்களில் ஈடுபடவில்லை. இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதிட்டார்.
மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என புகார்தாரர் (கணேசன்) தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில், 'ஏற்கனவே நித்தியானந்தா வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக இருக்கிறேன். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நித்தியானந்தாவின் சீடர்கள் என்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதால் முன்ஜாமின் வழங்கக் கூடாது' என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதி, 'நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய ஜூடிசியல் சிஸ்டத்தையே சேலஞ்ச் செய்கிறார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. அவர் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. ஆனால் அவரது சொத்துக்களை இந்திய ஜூடிசியல் பாதுகாக்க வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மனுதாரர் வழக்கறிஞர் என்பதால் இந்த இட விகாரத்தில் இனி தலையிட மாட்டேன் என உத்திரவாத பத்திரத்தை தாக்கல் செய்தால், அவருக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.